சென்னை: தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இனி முதல்வருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க. நகர் உள்ளிட்ட மண்டலங்களில், தனியார் நிறுவனத்தின் மூலம் ஜூலை 16 முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 1 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க., காங்கிரஸ், நாம்தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மேலும் சில சினிமா பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு எந்தத் தீர்வுமின்றி முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இனி முதல்வர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் மட்டுமே பங்கேற்போம் என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, போராட்டம் நடைபெறும் ரிப்பன் மாளிகை வளாகத்தில் இருந்து உடனடியாக கலைந்து செல்லாவிட்டால், வழக்கு தொடரப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.