தூய்மைப் பணியாளர் போராட்டம் : ‘முதல்வர் சொன்னது இதுதான்’ – விரிவாக விளக்கிய அமைச்சர் கே. என். நேரு

திருச்சி: 70 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவன் திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார்.

உறையூர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்து, அப்பகுதியில் சில வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே. என். நேரு,

“முன்பெல்லாம் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. கலைஞர் ஆட்சியில் அது சரி செய்யப்பட்டது. தற்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது மிகவும் பயனுள்ள திட்டம். 1,128 வாகனங்கள் மூலம் 88 ஆயிரம் பேர் பயன்பெற உள்ளனர்” என்றார்.

தூய்மைப் பணியாளர் போராட்டம்
சென்னையில் நடைபெற்று வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் கூறியதாவது:

“போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்களின் கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது; கால அவகாசம் தேவை. முதலமைச்சர், தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார். வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்துவோம் என்ற தகவல் தவறானது. புதிதாக யாரையும் பணியில் எடுக்கவில்லை. போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், தீர்வு கிடைத்தவுடன் இன்று அல்லது நாளைக்குள் பிரச்சனை முடிவடையும்.”

“நான் தூய்மைப் பணியாளர்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறு. ஏற்கனவே நான்கு முறை நேரில் பேசி உள்ளேன். தூய்மை பணி பாதிக்காமல், ஏற்கனவே பணியில் உள்ளவர்களையே பயன்படுத்தி வருகிறோம்” என்றும் தெரிவித்தார்.

நாய்க்கடி பிரச்சனை
தெரு நாய்களை கட்டுப்படுத்தும் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைச்சர் நேரு பாராட்டு தெரிவித்தார்.

“உத்தரவு நகல் வந்தவுடன், அதை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவோம். மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, இந்த தீர்ப்பு நல்ல வாய்ப்பாக உள்ளது” என்றார்.

“முதல்வர் அறிவித்த வாக்குறுதிகளை மட்டுமல்ல, அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சிகள் குறை கூறுவது இயல்பு” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version