சென்னை : தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதோடு, பாலியல் தொல்லையும் அளித்ததாக கூறி, ஜோதி என்பவர் உட்பட 12 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில்,
மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்,
மாநில மகளிர் ஆணையம் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்,
குற்றச்சாட்டில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்,
பாதிக்கப்பட்ட பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், 1,400 பெண் தூய்மைப் பணியாளர்களை கலைக்க ஆயிரம் ஆண் காவலர்கள் மற்றும் 200 பெண் காவலர்கள் மட்டுமே வந்ததாகவும், நீதிமன்றம் முன்பே வழங்கிய வழிகாட்டுதல்களை மீறி காவல்துறையினர் அத்துமீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி கேட்டும் மறுத்ததால் கைது செய்யப்பட்டனர். அப்போது சட்டவிரோத கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தி, பேருந்துகளையும் சேதப்படுத்தியது. இதற்கு வீடியோ ஆதாரங்களும் உள்ளன,” என விளக்கமளித்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி, “அரசு கொள்கை முடிவுகளை எதிர்க்க விரும்பினால் அது குறித்து சட்ட ரீதியாக அணுக வேண்டும் அல்லது ஆட்சியாளர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும். போராட்டங்களை அனுமதி பெற்ற இடங்களில் நடத்த வேண்டும்,” எனக் குறிப்பிட்டார்.
பின்னர், அனைத்து ஆதாரங்களுடனும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தது.