தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை உள்ளிட்ட உடைகள் அணிந்து வந்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட பொங்கல் பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பானை உடைத்தல், உறி அடித்தல், குண்டு எறிதல், சுருள்வால் சுற்றுதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அரசு அலுவலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பாரம்பரிய முறையில் வேஷ்டி – சட்டை அணிந்து வந்த மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், பானை அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் நேரடியாக கலந்து கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
பல்வேறு பொங்கல் விழாக்களில் கலந்து கொண்டிருந்த போதிலும், முதல் முறையாக பானை உடைத்தல் போட்டியில் கலந்து கொண்டு பானை உடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்,
“தமிழர் திருநாளான தைப்பொங்கல் அனைவரையும் ஒன்றிணைக்கும் பண்டிகை. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் குடும்பம் போல ஒன்றிணைந்து இந்த விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. பாரம்பரியத்தை காக்கவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் இத்தகைய நிகழ்ச்சிகள் அவசியம்” என்று தெரிவித்தார்.
மேலும் அரசு அலுவலர்களிடையே ஒற்றுமை, உற்சாகம் மற்றும் பணியாற்றும் மனப்பாங்கை அதிகரிக்க இத்தகைய கலாச்சார நிகழ்ச்சிகள் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
விழா நிறைவில் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த சமத்துவ பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
