98.25 கோடி முறைகேடு வழக்கில் எஸ்.பி. வேலுமணி பெயர் சேர்ப்பு : லஞ்ச ஒழிப்புத் துறை தகவல்

சென்னை: சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் இடம்பெற்றதாக கூறப்படும் ரூ.98 கோடியே 25 லட்சம் முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி மீது, மாநகராட்சிகளில் பணிகள் வழங்கியதில் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்கு ரத்து செய்யப்பட்டதோடு, புதிய ஆதாரங்கள் கிடைத்தால் மீண்டும் வழக்கு தொடரலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில், முறைகேடு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் காலதாமதம் ஏற்பட்டதாக அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால், அவர் மீது வழக்கு தொடர மாநில சபாநாயகர் அப்பாவு, கடந்த 2024 பிப்ரவரி 12 ஆம் தேதி அனுமதி அளித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இதே வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரிகள் கே.எஸ். கந்தசாமி மற்றும் கே. விஜயகார்த்திகேயன் மீது வழக்கு தொடர மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றும் தகவல் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவமதிப்பு மனுவின் விசாரணை வரும் செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version