பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ளார். அங்கு, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டது, சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்து வரும் நிலையில், அதற்கான பதிலடி நடவடிக்கையாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்தார். இதனால், இந்தியா – அமெரிக்கா உறவில் தற்காலிக விரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி – புடின் இடையேயான இருதரப்பு சந்திப்பு, மேலும் ஜி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தை ஆகியவை, அமெரிக்காவுக்கு சவாலாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எண்ணெய் கொள்முதல் மீதான வரி விவகாரம் குறித்து மூன்று தலைவர்களும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலளித்த அமெரிக்க தூதரகம், வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு தொடர்ந்து புதிய உயரத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இது 21ஆம் நூற்றாண்டின் வரையறுக்கப்பட்ட உறவுகளில் ஒன்றாகும். மக்கள் நலன், புதுமை, தொழில்முனைவோர், பாதுகாப்பு, இருதரப்பு ஒத்துழைப்பு என பல்வேறு துறைகளில் நம் பயணம் வலுப்பெற்று வருகிறது. #USIndiaFWDForOurPeople என்ற ஹேஷ்டேக் வழியாக, இந்த முன்னேற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.
சீனா, ரஷ்யாவுடன் இந்தியா வலுப்படுத்தும் உறவுகள், அமெரிக்காவின் அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
















