ஊதிய உயர்வு வழங்க கோரி நான்காவது நாளாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைத்தல், திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழிற் பயிற்சி, வங்கி கடன் வசதி மற்றும் அனைத்து அரசு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஊதியத்தை நேரடியாக வங்கி கணக்கு மூலம் வழங்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர்ந்து நான்காவது நாளாக 300-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான்காவது நாளாக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
