வீடு தேடி வரும் ரூ.5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ?

2026ம் ஆண்டுக்கான பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பண உதவி வழங்குவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, நிதித்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த திட்டத்தின் பொருளாதார சாத்தியங்களை ஆய்வு செய்து வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆண்டை முன்னிட்டு நலத்திட்ட பேச்சுவார்த்தைகள்

அடுத்தாண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களிடையே ஆதரவை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நடவடிக்கை, மாநிலத்தின் பொருளாதார நிலையைச் சமநிலைப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து பரிசுகள்

முன்னர் போலவே, இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுமென தகவல் கிடைத்துள்ளது. மேலும், இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதே நேரத்தில், “வெள்ளம் வழங்கப்படுமா?” என்ற கேள்வி இன்னும் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என அரசு தரப்புகள் தெரிவித்துள்ளன.

நிதி நெருக்கடிக்கிடையில் திட்டம் செயல்படுத்துமா?

மாநிலத்தின் தற்போதைய நிதி நிலை சவாலாக உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே மகளிர் உரிமைத் திட்டம், நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு முதலீடுகள் போன்றவற்றுக்கு பெரும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு, “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் 44 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளதால், நிதி மேலாண்மை சிக்கலாக இருக்கிறது.

எனினும், வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள சூழ்நிலையில் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்ற நோக்கில், தி.மு.க. தலைமை இந்த திட்டத்தை முன்னெடுக்க விரும்புகிறது என கூறப்படுகிறது.

2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நன்மை

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இதற்காக சுமார் ரூ.10,000 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார ஆதாரங்களை உருவாக்க நிதித்துறை பல்வேறு மாற்று வழிகளை ஆராய்கிறது. இதன் இறுதி தீர்மானம் பண்டிகைக்கு நெருக்கமாக வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version