சென்னை: பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.2.26 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த பூர்ணேஷ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடி எப்படி நடந்தது?
சென்னை தி.நகரைச் சேர்ந்த கிஷோர் என்பவருக்கு, வாட்ஸ்அப்பில் வந்த தகவல் மூலம் பங்கு வர்த்தக குழுவில் சேர அழைப்பு வந்தது. அதில் சேர்ந்து, குற்றவாளிகள் அனுப்பிய லிங்கின் மூலம் ஆன்லைன் பங்கு வர்த்தக வலைத்தளத்தில் இணைந்தார். பின்னர், IPO-வில் முதலீடு செய்யுமாறு தூண்டியதோடு, அதிக லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதியின் பேரில் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.2,26,00,000 பரிமாறினார். பின்னர் தான் மோசடியில் சிக்கியிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
கிஷோர் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியது. அதன்பேரில் தனிப்படையினர், சத்தியநாராயணன், மணிவேல், ரோஷன், சிம்சேன் செல்லதுரை ஆகியோரை கடந்த ஜூன் 26ஆம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து ஆதனன், அப்சர் சௌகான் ஆகியோர் ஜூலை 11ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாக இருந்த பூர்ணேஷ் சிக்கினார்
இதே வழக்கில் தலைமறைவாக இருந்த கோயம்புத்தூர், ஒண்டிபுதூர் ரோட்டையைச் சேர்ந்த பூர்ணேஷ் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கைப்பேசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சைதாப்பேட்டை 11வது பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சமூக ஊடகங்களை குறிவைக்கும் மோசடிகள்
போலியான பங்கு வர்த்தக செயலிகள், இணையதளங்கள், மற்றும் அதிக லாபம் தரும் முதலீட்டு விளம்பரங்கள் மூலம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் பொதுமக்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறை எச்சரிக்கை
பொதுமக்கள் தெரியாத நபர்களின் கோரிக்கையின் பேரில் வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்ற வேண்டாம், போலியான ஆவணங்களின் மூலம் நடப்பு வங்கி கணக்குகளை திறந்து கொடுக்க வேண்டாம் எனவும், இத்தகைய மோசடிகளில் சிக்கினால் உடனடியாக 1930 என்ற தேசிய இணையவழி குற்றத்தடுப்பு உதவி எண்னைத் தொடர்புகொள்வதோடு, www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.