ஐபிஎல் 2025 தொடரின் சாம்பியனாக திகழ்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சீசனில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற RCB, 17 ஆண்டுகால கனவை நனவாக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 4ம் தேதி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 11 ரசிகர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்திற்குப் பின், கர்நாடக உயர் நீதிமன்றம் தானாகவே வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியிருந்தது. இதையடுத்து, சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டதால் பெரிய நிகழ்ச்சிகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டன.
இந்நிலையில், RCB அணியை இங்கிலாந்து மதுபான நிறுவனம் டியாஜியோ தனது இந்திய கிளையான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் வழியாக நிர்வகித்து வந்தது. தற்போது, அந்த நிறுவனம் 2026 மார்ச் 31க்குள் தனது உரிமையை விற்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
டியாஜியோ நிறுவனம் நவம்பர் 5ம் தேதி பம்பாய் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில், “ஆர்சிபி எங்களுக்கு மதிப்புமிக்க சொத்தாக இருந்தாலும், எங்களின் முக்கிய வணிகம் மதுபான துறை என்பதால் கிரிக்கெட் அணி நிர்வாகம் அதில் சேராது. எனவே உரிமையை மாற்ற முடிவு செய்துள்ளோம்,” என தலைமைச் செயல் அதிகாரி பிரவீன் சோமேஷ்வர் தெரிவித்தார்.
அணியின் மதிப்பு தற்போது சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.17,700 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனை வாங்க சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, அதானி குழுமம், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் பார்த் ஜிண்டால், மற்றும் டெல்லியைச் சேர்ந்த பலதுறை தொழிலதிபர் ஒருவரும் ஆர்வம் காட்டியுள்ளனர். கூடுதலாக, அமெரிக்காவை தளமாகக் கொண்ட இரண்டு தனியார் பங்கு நிறுவனங்களும் (Private Equity Firms) ஆராய்ச்சி நடத்தி வருகின்றன.
மார்ச் 31, 2025 முடிவடைந்த நிதியாண்டில், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் மொத்த லாபத்தில், RCB பிரிவு மட்டும் 8.3% பங்களிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. அணி விற்பனை மார்ச் மாதத்திற்குள் நிறைவேறினால், அந்த லாபம் அந்நிறுவனத்தின் வருடாந்திர கணக்கில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம், இந்திய பிரீமியர் லீக் வரலாற்றில் முக்கிய சொத்து மாற்றம் ஒன்றாக RCB விற்பனை பதிவாக வாய்ப்புள்ளது.















