மனிதனின் அறிவுத்திறன் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் படைப்பாக உருவான ரோபோக்கள் இன்று அன்றாட வாழ்க்கையில் பெரும் பங்காற்றுகின்றன. தற்போது பெங்களூருவில் வீட்டு வேலைகளுக்காக பணிப்பெண்களுக்கு பதிலாக ரோபோக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
கர்நாடக மாநிலம் ஹெப்பலில் வசிக்கும் மனிஷா ராய் (35) தனது சமையல்காரருக்குப் பதிலாக சமையல் ரோபோவை வாங்கி பயன்படுத்தி வருகிறார். “ரோபோ வந்ததிலிருந்து என் கணவர் நவீனும், 2½ வயது மகள் நட்ஷித்ராவும் ரோபோ சமையலுக்கு மனதார ரசிக்கிறார்கள். இது நறுக்குதல், வதக்கல், கிளறல், ஆவியில் வேகவைத்தல், பிசைதல் என அனைத்தையும் தானாக செய்கிறது” என தெரிவித்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் மீரா வாசுதேவ் இரண்டு வகை ரோபோக்களை பயன்படுத்தி வருகிறார். “தூசியை எளிதில் சுத்தம் செய்யும் திறமைக்கொண்டவை. குனிந்து வேலை செய்ய வேண்டியதில்லை” என தெரிவித்தார்.
கோரமங்கலா பகுதியை சேர்ந்த ரேணுகா குருநாதன் (43) பாத்திரம் கழுவும் மற்றும் தரை துடைக்கும் ரோபோக்களைப் பயன்படுத்தி வருகிறார். “வீட்டுப் பணிக்காக வெளியாட்கள் இல்லாமல் இருப்பது சுதந்திரமாக உள்ளது” என கூறினார்.