தஞ்சாவூர் மாவட்டம், கொல்லாங்கரை கிராமத்தில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை தனிநபர் ஒருவர் தனக்குச் சொந்தமானது எனக் கூறி வேலி போட்டு மறித்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இப்பாதையை பயன்படுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் அன்றாடம் செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால், பாதை மறிக்கப்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே 2ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் பின் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில், நிலம் சொந்த உரிமை கோரிய நபர் நீதிமன்றத்தில் தீர்வு காண வேண்டும், அதுவரை பாதையை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
ஆயினும், அதற்குப் பிறகும் மாணவர்களை பாதையில் செல்ல விடாமல் தடுக்கும் காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சிலர் இதை சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையை கண்டித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “பள்ளி மாணவர்களை பாதை வழியாக செல்ல விடாமல் தடுத்திருப்பது கல்வி உரிமைக்கும், குழந்தைகள் உரிமைக்கும் எதிரான செயல். சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் ஆன நிலையிலும் இப்படிப்பட்ட தீண்டாமை கொடுமைகள் சமூக ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கின்றன. குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நிலப்பிரச்சினையில் அதிகாரிகள் விரைவில் சமூகத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.