சென்னை:
தமிழகத்தில் ரேஷன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது அரசுக்கு கூடுதல் செலவையும், பொருட்களின் தவறான கையாளலுக்கும் காரணமாகி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், உணவு வழங்கல் துறை புதிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ரேஷன் சலுகைகள் :
மாநிலத்தின் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதாந்திர அடிப்படை பொருட்கள் இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வழங்கப்பட்டு வருகிறது.
அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு: 35 கிலோ அரிசி
முன்னுரிமை (PHH) கார்டுகள்: குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி – இலவசம்
முன்னுரிமையற்ற அரிசி கார்டுகள்: 20 கிலோ அரிசி – இலவசம்
ஒரே நபர் கொண்ட கார்டுக்கும் 12 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இவற்றுடன் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்றவைவும் சலுகை விலையில் வழங்கப்படுகின்றன. மொத்தமாக, இந்தத் திட்டங்களுக்கு மாநிலம் வருடத்துக்கு சுமார் ₹12,500 கோடி செலவிடுகிறது.
இறந்தவர்களின் பெயர் நீக்காததால் ஏற்படும் சிக்கல்கள்
உணவு வழங்கல் துறையின் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மாதந்தோறும் சுமார் 35,000 முதல் 40,000 பேர் வரை உயிரிழக்கின்றனர். ஆனால், இந்த மரண தகவல்கள் ரேஷன் கார்டுகளில் உடனடியாக புதுப்பிக்கப்படாததால்:
இறந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்கள் தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது, அதில் சில பொருட்கள் கையாடல் செய்யப்பட வாய்ப்பு அதிகரிக்கிறது, அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படுகிறது. இந்த பிரச்சனையைத் தீர்க்க, துறை இறப்பு விவரங்களை மருத்துவ நிலையங்களிலிருந்து நேரடியாக பெற்று, மாதந்தோறும் பெயர் நீக்க நடவடிக்கையை மேம்படுத்தியுள்ளது.
பெயர் நீக்க விண்ணப்பம் :
உறவினர்கள், குடும்பத்தில் ஒருவர் இறந்தால், அவரின் மரணச் சான்றிதழுடன் அருகிலுள்ள ரேஷன் கடை, அல்லது உணவு வழங்கல் துறை அலுவலகத்தில்
விண்ணப்பம் அளிக்கலாம். மேலும், இது ஆன்லைனில் செய்யும் வசதியும் உள்ளது. அதற்காக desca.py.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு ஆய்வு குழுக்கள் செயல்பாடு
மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள குழுக்கள் ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்து தவறான பதிவுகளை சரிசெய்கின்றன. பெயர் ஒரே மாதிரியாக உள்ளவர்களில் குழப்பம் ஏற்பட்டால், உதவி ஆணையர் அலுவலகம் மூலம் விசாரணை செய்யப்பட்டு பின்னர் பெயர் நீக்கம் செய்யப்படும்.
மாநில அளவிலான புள்ளிவிவரம் :
2.27 கோடி ரேஷன் கார்டுகள், 7 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். நடப்பு ஆண்டுவரை, 1.83 லட்சம் ரேஷன் கார்டுகளில் இருந்து 6.15 லட்சம் பேரின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளன.
ரேஷன் கார்டு தரவைத் துல்லியப்படுத்தும் இந்த நடவடிக்கைகள், அரசின் செலவினை குறைப்பதற்கும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியானவர்களிடம் செல்வதையும் உறுதி செய்யும் என உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
















