பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா (BoB), தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தை “மோசடி” என அறிவித்த பின்னணியிலும், இன்று பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) பங்குகள் உயர்வை கண்டுள்ளன.
இன்று காலை ஆரம்ப வர்த்தகத்தில் NSE-யில் ரூ.2-க்கு கீழே இருந்த RCom பங்குகள், இன்ட்ராடே டீல்களில் அதிகபட்சமாக ரூ.1.43 வரை உயர்ந்தன. இதன் மூலம், கடைசி மூடல் விலையை விட சுமார் 3.6% மேல் உயர்வு பதிவு செய்யப்பட்டது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது திவால் நிலையில் இருந்தாலும், சில்லறை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதால் பங்கு விலை தற்காலிக உயர்வை கண்டதாக சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.
முன்னதாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவையும், 2016-ஆம் ஆண்டிலேயே RCom கடன் கணக்கை மோசடி என வகைப்படுத்தி, அனில் அம்பானி மீது நிதி திசைதிருப்பப்பட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன. இந்நிலையில், BoB-வின் புதிய அறிவிப்பு சந்தையில் கூடுதல் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், RCom பங்குகள் உயர்ந்தாலும், அனில் அம்பானி குழுமத்தின் பிற பங்குகள் சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குகள் 2% க்கும் மேல் சரிந்து ரூ.281 வரை குறைந்தன. ரிலையன்ஸ் பவர் பங்குகள் ஆரம்பத்தில் சரிந்தபோதும், பின்னர் 0.5% மட்டுமே உயர்வை பதிவு செய்தன.
தற்போது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு ரூ.1.40 விலையில், சுமார் 1.45% உயர்வுடன் வர்த்தகம் செய்யப்படுகிறது.
