நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை, உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன் மயிலாடுதுறையில் பேட்டி, நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் பெறுவது தடுக்கப்படும், அனைவரும் ஒத்துழைக்க அமைச்சர் கோரிக்கை :-

தமிழக உணவுத்துறை அமைச்சரும் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வேங்கடரமணன், இரண்டாவது நாளாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரம் ஆதீனம் மடத்தில் மடாதிபதியை சந்தித்து, கிடங்குகள் அமைக்க நிலம் வழங்க ஆதீனத்திடம் கோரிக்கை வைத்தார், தொடர்ந்து நத்தம் கிராமத்தில் விவசாயிகளை சந்தித்து, குறுவை சாகுபடி மற்றும் கொள்முதல் நிலையங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சரிடம் பேசிய விவசாயிகள், பெருமழை காலங்களில் தண்ணீர் வடிவதற்கு வசதியாக, தூர்ந்து போன வாய்க்கால்களை கண்டறிந்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பும் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் இல்லாமல் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 7500 பேரை பணி நிரந்தரம் செய்வதற்கு பட்டியல் அளித்துள்ளனர் இது குறித்து முதலமைச்சரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், நெல்மணிகள் வீணாவதை தடுக்க தேவையான கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தருமபுரம் ஆதீனம் சார்பில் நான்கு இடங்களில் இடம் வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடைகால குடிநீர் தட்டுப்பாடு சமாளிக்க மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அமைச்சர், நெல் கொள்முதல் நிலையங்களில் 40 ரூபாய் கையூட்டு பெறுவது குறித்து, கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுது, ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும், அனைவரும் ஒருங்கிணைந்து முறைகேட்டை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார். விவசாயிகள் சந்திப்பின் பொழுது மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Exit mobile version