டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முழுவதும் இடைவிடாமல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருவாரூரில் 13.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக அழகிரி நகர், கட்டபொம்மன் நகர், இடும்பன் நகர் கந்தன் நகர், சூரியன் குளம் தென்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளே தெரியாத அளவுக்கு மழை நீர் தேங்கி உள்ளது. குறிப்பாக சூரியன் குளம் தென்கரைப்பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் உட்பகுந்துள்ளது. முழங்கால் அளவுக்கு வீட்டுக்குள் புகுந்த தண்ணீரால் வீட்டிலிருந்த பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் நீரில் மிதக்கின்றன. முதியவர்கள், குழந்தைகள் வீட்டில் வசிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது…
கடந்த மாதம் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது வீட்டின் சுவர் ஓரமாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட நிலையில் முழுமையாக மூடப்படாததன் காரணமாக வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக திருவாரூர் நகராட்சி நிர்வாகம் தலையிட்டு மழை நீரை அப்புறப்படுத்தி உரிய நிவாரணம் வழங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி : சரஸ்வதி – பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசி
















