கோவை :
தமிழகத்தில் வன்மத்தோடு நடைபெறும் திமுக ஆட்சியை எதிர்த்து, அதனை கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, கோவையில் பாஜக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் முதலிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் உரையாற்றியபோது, அவர் கூறியதாவது :
“தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி சரியாக கிடைப்பதில்லை என்ற குறை எப்போதும் கூறப்படுகிறது. 20 ரூபாய் வரி கட்டினால் அதில் இரு ரூபாய்கூட திருப்பி கிடைக்கவில்லை என்பதே உண்மை. கோவை மாவட்டம் தமிழகத்தில் மிக அதிக வரி வருவாய் தருகிறது. ஆனால், அதன் பயன் மக்களுக்கு திரும்பிக் கிடைக்கிறதா என்பதை கேட்கும் துணிவு இருக்க வேண்டும்,” என்றார்.
“இங்கு வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை எதிர்த்து, மக்கள் கேள்வி கேட்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் கல்வித் திட்டங்களை நாடு முழுவதும் ஏற்றுக்கொள்கிறார்கள். கேரளா மாநிலத்திலுள்ள கம்யூனிஸ்ட் அரசு கூட ‘பிஎம்எஸ்ஆர்இ’ கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. ஆனால், தமிழக அரசு மத்திய அரசின் எந்தத் திட்டத்தையும் மக்களிடம் சேர விடாமல் எதிர்க்கிறது.”
“ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்று கிராமப்புற மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேருகின்றனர். இது பிரதமர் மோடியின் கல்வி மாற்ற முயற்சிகளின் விளைவு,” என்றும் அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் செய்ய முயற்சி நடப்பதாகவும், அதில் ஏன் திமுகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது என்பதையும் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.
“வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்,” எனக் கூறி அவர் தனது உரையை முடித்தார்.

















