மதுரை மாநகரில் கோரிப்பாளையம் ஒரு முக்கியமான சந்திப்பாக உள்ளது. அரசு ராஜாஜி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், தமுக்கம் மைதானம், அமெரிக்கன் கல்லூரி போன்ற முக்கிய இடங்கள் அருகில் இருப்பதால், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய இடமாக இது திகழ்கிறது. மேலும், மாட்டுத்தாவணி, அண்ணா நகர் போன்ற பகுதிகளில் இருந்து சிம்மக்கல், தெற்குவாசல் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாகவும் கோரிப்பாளையம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கோரிப்பாளையம் – சிம்மக்கல் இடையிலான சாலையை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ப, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் வைகை வட மற்றும் தென்கரைகளில் புதிய பைபாஸ் சாலைகள், மதுரை சுற்றுச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனுடன், கோரிப்பாளையம் மற்றும் மேலமடை சந்திப்புகளில் புதிய மேம்பாலங்களும், வைகை வடகரையில் ஆரப்பாளையம் காமராஜர் பாலத்திலிருந்து சமயநல்லூர் சந்திப்பு வரை புதிய பைபாஸ் சாலையும் அமைக்கப்பட்டு வருகின்றன. கோரிப்பாளையம் மேம்பாலத்தில் தூண்கள் அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தெற்குவாசல் சந்திப்பில் சாலை விரிவாக்கத்துடன் கூடிய புதிய பாலம் மற்றும் மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் அரசுக்கு மீண்டும் கருத்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோரிப்பாளையத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் முடிந்தால், அங்கு போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும்.
இதனுடன், அங்கிருந்து 2.5 கி.மீ. தூரம் வரை பெரியார் பேருந்து நிலைய சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு நகர் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் மாற்றம் செய்ய முடியும் எனத் தெரிவித்தனர். வைகை வடகரை, தென்கரை பைபாஸ் சாலைகள் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் தென் மாவட்டங்களுக்குச் செல்லவும், கோரிப்பாளையம், மேலமடையில் கட்டப்படும் புதிய மேம்பாலங்கள் நகர் பகுதிகளுக்குள் தடையற்ற வாகனப் போக்குவரத்துக்கும் வழிவகுக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதனுடன், சிம்மக்கல் முதல் பெரியார் பேருந்து நிலையம் வரையிலான சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டால், மாநகரின் உள்பகுதியில் நிலவும் நெரிசல் முற்றிலுமாக கட்டுக்குள் வரும். மாட்டுத்தாவணியில் கட்டப்பட்டு வரும் டைடல் பார்க் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், அதற்கு ஏற்றாற்போல் தடையற்ற வாகனப் போக்குவரத்துக்கு உதவிடும் வகையில் சாலை வசதி அமைய வேண்டும். அதற்கு, உள்ளூர் வாகனப் போக்குவரத்து மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தி, சிம்மக்கல் சாலையை விரிவாக்கம் செய்ய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், கே.கே. நகரில் இருந்து உத்தங்குடி வரை புதிய மேம்பாலம் கட்டினால் புறநகர் மக்களுக்கும், அவசர ஊர்திகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


















