திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வேயர்கள் நான்காவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தமிழக அரசு தங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என கூறி நான்காவது நாளான இன்று 50-க்கும் மேற்பட்ட நில அளவை அலுவலர்கள் 18 அம்ச கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் களப் பணியாளர்களின் பணிச் சுமையை போக்கிட பணிகளை முறைப்படுத்திட வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீளப் பெற்றிடவேண்டும். புற ஆதாரம் மற்றும் ஒப்பந்த முறை பணி நியமனத்தை கைவிடவேண்டும், காலியாக உள்ள நில அளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண் பாடுகளை களைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட சர்வேயர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
