திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளரை கன்னத்தில் அறைந்த செவிலியரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மருத்துவ மனையில் ஒப்பந்த அடிப்படையில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியற்றி வருகின்றனர். இந்த நிலையில் 2-வது மாடியில் காசநோயாளிகள் பிரிவில் உள்ள அறையை சுத்தம் செய்யாமல் இருப்பதை குறித்து அங்கு பணியில் இருந்த செவிலியர் மீரா என்பவர் அறையை சுத்தம் செய்யுமாறு மாலா என்ற தூய்மை பணியாளரிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் தூய்மை பணியாளர் மாலா என்பவர் செவிலியர் கூறியதை கவனிக்காமல் சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செவிலியர் தூய்மை பணியாளரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மருத்துவ மனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் இதனை கண்டித்து தூய்மை பணிகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தர்ணா போராட்டத்தில் செவிலியர் மீரா என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
			

















