டி.என்.டி சமுதாயத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
– சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என எச்சரிக்கை:-
டி.என்.டி மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சீர் மரபினர் 68 சமுதாயங்களுக்கும் “டி.என்.டி” என்ற ஒற்றைச் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டி.என்.டி சமுதாய மக்கள், சீர்மரபினர் சமுதாயங்களுக்கு ஒரே ஒற்றைச் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், டி.என்.டி மக்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தபோது, மீண்டும் ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டதாகவும், ஆனால் தற்போது வரை அது நடைமுறைக்கு வராததால் டி.என்.டி சமுதாய மக்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
டி.என்.டி (Denotified Tribes) எனப்படும் சீர் மரபினர் சமுதாயங்கள், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ‘குற்றவாளி சமூகங்கள்’ என அறிவிக்கப்பட்டு, பின்னர் சுதந்திர இந்தியாவில் அந்தச் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சமூகங்களாகும். இருப்பினும், இன்றளவும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலேயே இச்சமுதாயங்கள் வாழ்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள சீர் மரபினர் சமுதாயங்கள், பாரம்பரிய கலைகள், நாட்டுப்புற இசை, கைவினைப் பொருட்கள் தயாரித்தல், மர வேலைப்பாடுகள், தோல் தொழில், பாம்பு பிடித்தல், விலங்கு பராமரிப்பு, கூலி வேலை, சாலையோர வியாபாரம் உள்ளிட்ட வாழ்வாதார தொழில்களை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தனித்தனி சாதிச் சான்றிதழ்கள் காரணமாக, கல்வி, நிலையான வேலைவாய்ப்புகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இச்சமுதாயங்களில் கல்வி வாய்ப்புகள் குறைவாக இருந்த காரணத்தால், தலைமுறை தோறும் கல்வித் தட்டுப்பாடு நிலவி வந்ததாகவும், அதன் விளைவாக அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் நலத்திட்டங்களை அணுகுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஒற்றைச் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டால், கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு மற்றும் அரசு நலத்திட்டங்களில் சமுதாயம் முன்னேற வாய்ப்பு ஏற்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும், தனித்தனி சாதிச் சான்றிதழ்கள் காரணமாக சமூகத்தின் உள் அமைப்பில் குழப்பம் மற்றும் பிரிவினை நிலவி வருவதாகவும், ஒற்றை டி.என்.டி சான்றிதழ் வழங்கப்பட்டால், சீர் மரபினர் சமுதாயங்கள் ஒருங்கிணைந்த சமூக அடையாளத்துடன் செயல்பட முடியும் என்றும், அது சமூக ஒற்றுமை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
டி.என்.டி ஒற்றைச் சாதிச் சான்றிதழ் வழங்குவதாக கூறி தங்களை ஏமாற்றி, சமுதாய மக்களின் வாக்குகளை பெற்ற திமுகவிற்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என, கோயில்களில் சமுதாய மக்களிடம் சத்தியம் வாங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஒற்றைச் சாதிச் சான்றிதழ் வழங்கப்படும் வரை, திமுக அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்களும், சட்டமன்றத் தேர்தலில் எதிர்ப்பு பிரச்சாரமும் தொடரும் என டி.என்.டி மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய டி.என்.டி மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி, “டி.என்.டி சமுதாயத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசு, அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியுள்ளது. இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். எங்கள் சமுதாய மக்களை ஏமாற்றிய திமுகவிற்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் டி.என்.டி சமுதாயம் தக்க பாடம் புகட்டும்” என தெரிவித்தார்.
