கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் 200 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்துவரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று இந்துசமய அறநிலையத்துறையும், நீதிமன்றங்களும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக வெளியேற்ற முயற்சிப்பதைக் கண்டித்தும், உரிமைகளுக்காக போராடும் பயனாளிகள் மற்றும் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைவர்களை அராஜகமான முறையில் காவல்துறையினர் கைது செய்வதாக கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில பொருளாளர் எஸ்.துரைராஜ் கலந்துகொண்டு, வெண்ணைமலை பகுதியில் 200 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்துவரும் மக்களை அந்த இடம் பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமானது எனக் கூறி, 1,350 வீடுகள், 40 வணிக நிறுவனங்கள் உள்ளன. தமிழக அரசின் சிப்காட் அங்கு செயல்படுகிறது. அங்குள்ள 548 ஏக்கர் நிலத்துக்கு இதுவரை யாரும் வாடகை, பகுதி கேட்கவில்லை. 2019-ல் சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் அந்த நிலம் கோயிலுக்கு சொந்தமானது என அந்த இடத்தை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டா நிலத்தில் வசித்து வரும் அந்த மக்களை காப்பாற்ற தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆனால், அரசு நீதிமன்ற தீர்ப்பை பயன்படுத்திக்கொண்டு அந்த மக்களின் மீதும், மக்கள் பிரதிநிதிகள் மீதும் காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை ஏவுகிறது. இந்த அராஜகப் போக்கினை உடனடியாக கைவிட்டு அந்த இடங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கண்டன உரையாற்றி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
















