மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உளுந்து, பச்சை பயிறு கொள்முதல்

மயிலாடுதுறை மாவட்டத்தில்
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உளுந்து, பச்சை பயிறு கொள்முதல்
செய்யப்படாததால் விவசாயிகள் அவதி

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. சம்பா, தாளடி நெல் சாகுபடி தரிசில் உளுந்து, பச்சைபயிறு சாகுபடி செய்வது வழக்கம். நிகழாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 76 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து, பச்சை பயிறு சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. விவசாயிகள் விளைவிக்கும் தானியங்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசு ஒன்றிணைந்து ஆண்டுதோறும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக உளுந்து, பயிறு கொள்முதல் செய்வது வழக்கம். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்பனை செய்வதற்கு சிட்டா அடங்கல், ஆதார், வங்கி பாஸ்புத்தகம் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதி ஒழுங்குமுறை விற்பனைகூடங்களில் ஆன்லயனில் பதிவு செய்தால் எந்த தேதியில் தானியங்களை கொண்டுவர வேண்டுமென்று விவசாயிகளுக்கு குறுஞ்செய்திகள் வரும் அன்றைய தினம் கொண்டு சென்றால் விவசாயிகள் நாள்கணக்கில் காத்திருக்காமல் தங்கள் தானியங்களை உடனடியாக விற்பனை செய்துவிட்டு வரலாம் அதற்கான பணம் ஒருவார காலத்திற்குள் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவுவைக்கப்படுவது வழக்கம். அதனால் உளுந்து, பயிறு சாகுபடி செய்த விவசாயிகள் நியாயமான விலை கிடைக்கும் என்பதால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில்தான் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், சீர்காழி ஆகிய நான்கு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் தொடங்கி ஜுன் மாதம் இறுதிவரையில் பயிறு,உளுந்து கொள்முதல் நடைபெறும்.
நிகழாண்டிற்கான உளுந்து, பயிறு கொள்முதல் செய்ய மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்காததால் விவசாயிகள் முன்பதிவு செய்ய முடியாமல் காத்திருக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் வியாபாரிகள் 100 கிலோ எடைகொண்ட ஒரு மூட்டை பயிறு ரூ.7 ஆயிரத்திற்கும், உளுந்து ரூ.7,500 முதல் ரூ.8 ஆயிரம் வரைதான் கேட்கின்றனர். இதனால் கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைகூடங்களில் விற்பனை செய்யலாம் என்று பார்த்தால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பயிறு ரூ.87.68பைசாவிற்கும்,உளுந்து ரூ.78க்கும் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. இதனை அறிந்துகொண்டு தனியார் வியாபாரிகள் பயிறு விலையை குறைத்து கேட்கின்றனர். பச்சைபயிறு அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதால் அதனை குறைந்தவிலைக்கு வாங்குவதற்கு தனியார் வியாபாரிகள் முயற்சி செய்கின்றனர். அறுவடை செய்த பயிறை ஒரு மாதத்திற்கு மேலாக பாதுகாத்துவைத்திருக்கிறோம் காலம் கடந்தால் அவற்றில் பூச்சிதாகுதல் ஏற்படும். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. உடனடியாக மத்திய அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்வதற்கான அனுமதி வழங்கி பணியை தொடங்க வேண்டும் என்றனர்.

Exit mobile version