கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி, தனது தொகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு பழங்குடியின மக்களுடன் நேரடியாக கலந்துரையாடினார்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட பிரியங்கா காந்தி, 6.22 லட்சம் வாக்குகளை பெற்று, 4 லட்சத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது தொகுதியின் பல்வேறு பகுதிகளைச் சுற்றி மக்களின் குறைகளை கேட்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இதன் பகுதியாக, நிலம்பூர் அருகே உள்ள கருளை காடு மற்றும் கொட்டியம்வயல் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரை சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார். அப்பகுதியில் முன்மொழியப்பட்ட சாலைத் திட்டத்தையும் மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தார்.
அடர்ந்த காட்டுப்பகுதியில் நடந்த பயணத்தின் போது, கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் வரை குன்றுப்பாதையில் நடந்துசெல்ல வேண்டியிருந்தது. செங்குத்தான பாறைகள், தொங்குப்பாலங்கள், கயிறுகள் போன்ற சிரமமான வழித்தடங்களை உள்ளூர் மக்களின் உதவியுடன் கடந்தார்.
பின்னர், மானந்தவாடி அரண்மனை மற்றும் அங்குள்ள விவசாயிகளின் பண்ணைகளையும் பார்வையிட்டார். வயல்களில் பயிரிடப்படும் நெல் மற்றும் விவசாய முறைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்ததோடு, பழங்குடியின மக்களின் பாரம்பரிய வேட்டைக் கருவிகளையும் ஆர்வத்துடன் பார்வையிட்டார். குறிப்பாக, வில்-அம்பைப் பயன்படுத்தியும் பார்த்தார்.
வயநாடு வருகையின் போது, பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடியின தலைவரான செறுவயல் ராமனின் இல்லத்திலும் பிரியங்கா காந்தி சென்றிருந்தார்.
பிரியங்காவின் இந்த பயணம், வனப்பகுதியில் வாழும் மக்களிடம் நெருக்கம் ஏற்படுத்தியதோடு, கேரள மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.