பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட புதிய பயோபிக் படம் உருவாகி வருகிறது. இன்று அவரது பிறந்த நாளையொட்டி, இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டர் மற்றும் மா வந்தே என்கிற தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்த படத்தில், மோடியின் சிறுவயதிலிருந்து தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாறு வரை உண்மை சம்பவங்களுடன் கதை சொல்லப்பட உள்ளது. குறிப்பாக, மோடிக்கு வாழ்நாள் முழுவதும் துணை நின்ற அவருடைய தாய் ஹீராபென் மோடியுடனான பாசப்பிணைப்பையும் முக்கியமாக வெளிப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
மலையாள நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் மோடியாக நடித்துள்ளார். இசையமைப்பில் கே.ஜி.எஃப், சலார் போன்ற படங்களில் பணியாற்றிய ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை பாகுபலி, RRR போன்ற படங்களை கையாண்ட கே.கே. செந்தில்குமார் மேற்கொண்டுள்ளார்.
இயக்குனர் கிராந்தி குமார் இந்த படத்தை சர்வதேச தரத்தில், VFX தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னணி நிபுணர்களின் பங்களிப்புடன் உருவாக்கி வருகிறார். பான்-இந்தியா அளவில் அனைத்து இந்திய மொழிகளிலும், கூடுதலாக ஆங்கிலத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, மோடியின் குழந்தைப் பருவத்தை மையமாகக் கொண்டு Chalo Jeete Hain என்ற குறும்படம் (2018), அரசியல் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட விவேக் ஓபராய் நடித்த PM Narendra Modi (2019), மேலும் Modi: Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் வெளியானது. அவற்றுக்கு பின், இப்போது மா வந்தே திரைப்படம் மோடியின் ஆரம்ப கால வாழ்க்கையும், தாயாருடனான அவரது உறவையும் வெளிக்கொணர உள்ளது.