சென்னை:
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் அவர்களின் தாயார் அம்சவேணி இன்று (07.10.2025) காலை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.
அம்சவேணியின் உடல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள எல்.கே. சுதீஷின் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோட்டில் இன்று நடைபெற இருந்த தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தை ரத்து செய்து, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் அவசரமாக சென்னைக்கு திரும்பியுள்ளனர்.
அம்சவேணியின் இறுதி ஊர்வலம் நாளை (08.10.2025) மதியம் 1 மணிக்கு விருகம்பாக்கம் இல்லத்திலிருந்து தொடங்கி, வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயார் அம்சவேணி அவர்கள் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அன்பு தாயை இழந்த துயரத்தில் வாடும் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே. சுதீஷ் மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார் :
“பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீஷ் அவர்களின் தாயார் அம்சவேணி அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்” என கூறியுள்ளார்.
அம்சவேணியின் மறைவு, தேமுதிக மற்றும் ரசிகர் வட்டாரங்களில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

















