பூம்புகார் கல்லூரியில் சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (ICAR-CIBA) சார்பில் கடலோரக் கிராமங்களைச் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்காக கொடுவா மீன் குஞ்சு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அரசு கலைக் கல்லூரியில் மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (ICAR-CIBA) சிபா சார்பில் கடலோர ஆதிதிராவிடர் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்காக கொடுவா மீன் குஞ்சு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு, பயிற்சி முகாம் நடைபெற்றது. சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவன இயக்குநர் குல்தீப் கே லால் தலைமை வகித்தார். கடலோர கிராமங்களில் உவர்நீர் வளங்களைப் பயன்படுத்தி, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்காக ஒரு லாபகரமான வாழ்வாதார மேம்பாட்டு மாதிரியை சிபா நிறுவனம் உருவாக்கியுள்ளது. அதன்படி கொடுவா மீன் வளர்ப்பில் மூன்றடுக்கு தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது. முதற்கட்டமாக முட்டைகள் மற்றும் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு 2 செ.மீ-க்கும் குறைவான அளவுள்ள மீன் குஞ்சுகளை மட்டுமே மக்களிடம் வழங்குகிறோம். அதனை இரண்டு முதல் மூன்று அங்குல அளவு வளர்த்து மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யலாம். வளர்ப்பு குளங்கள் அல்லது கூண்டுகளில் விடுவதற்கு 10 முதல் 12.5 செ.மீ அளவுள்ள மீன் குஞ்சுகளுக்கே அதிகத் தேவை உள்ளது. இந்த சிறிய மீன் குஞ்சுகளை 75 முதல் 90 நாட்களில் 10-12.5 செ.மீ அளவுள்ள பெரிய குஞ்சுகளாக வளர்த்தெடுத்து விற்பனை செய்யும் போது ஒரு வருவாயை ஈட்ட முடியும். இந்த கொடுவா மீன் குஞ்சு வளர்ப்புத் தொழில், பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பையும் நிலையான வருமானத்தையும் வழங்குகிறது இதனால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என்றார். தொடர்ந்து கொடுவா மீன்குஞ்சி வளர்ப்பின் மூலம் ஈட்டிய வருவாய் 4.68 காசோலையை பயனாளிகளுக்கு சிபா இயக்குனர் வழங்கினார்.
நாகை மண்டல மீன்வளத்துறை இணை இயக்குநர் ஆர்.ஷர்மிளா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில் இந்திய அரசின் பிரதமர் மத்சய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ், பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினர் ஆசிய கொடுவா மீன் குஞ்சு வளர்ப்பை ஒரு குழுவாக இணைந்து செய்தால் குழுக்களுக்கு 40% மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தமிழக அரசின் மீன்வளத்துறையை அணுகி பயன்பெறலாம் என்றார். தொடர்ந்து முதன்மை விஞ்ஞானிகள் கைலாசம், குமரன், ஜெயக்குமார்,சுப்புராஜ்,அம்பாசங்கர், மகாலட்சுமி ஆகியோர் கொடுவா மீன் குஞ்சு வளர்ப்பு நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், பண்ணைகளின் நடைமுறை பயிற்சி அளித்தனர். இதில் சீர்காழி வட்டத்தை சேர்ந்த கடலோர கிராமங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
