பின்னலாடை நகரமான திருப்பூரில் அமைந்துள்ள ப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில், தமிழர்களின் வீரத்தையும், ஈரத்தையும் பறைசாற்றும் வகையில் தைப்பொங்கல் திருநாள் ‘பண்பாட்டுத் திருவிழாவாக’ மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வருங்காலத் தூண்களான மாணவ, மாணவியர் நமது மண்ணின் வேர்களை மறவாமல் இருக்கவும், பாரம்பரிய விளையாட்டுகளின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளவும் பள்ளியின் சார்பில் இந்த ஆண்டு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பள்ளி வளாகம் முழுவதும் கரும்புத் தோரணங்கள் மற்றும் மண் வாசனை கமழ அலங்கரிக்கப்பட்டு ஒரு பழமையான கிராமமாகவே காட்சியளித்தது.
விழாவின் தொடக்கமாக, மாணவ, மாணவியர் தங்களது வீடுகளில் இருந்து பக்தி சிரத்தையுடன் வளர்த்து வந்த முளைப்பாரிகளைத் தலை சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மேள தாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலம் கிராமிய மணத்தைப் பரப்பியது. அதனைத் தொடர்ந்து, தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்பாட்டம், வீரத்தின் அடையாளமான புலியாட்டம் மற்றும் தாள கதியுடன் கூடிய தப்பாட்டம், கும்மியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகள் திருப்பாவை பாடல்களைப் பாடி, அதன் ஆன்மீக மற்றும் வாழ்வியல் விளக்கங்களை எடுத்துரைத்ததுடன், பொங்கலின் அறிவியல் மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் குறித்த உரைகளையும் நிகழ்த்தி அனைவரையும் கவர்ந்தனர்.
இந்த விழாவின் சிறப்பம்சமாக, தற்கால சூப்பர் மார்க்கெட் கலாச்சாரத்திற்கு மத்தியில் மறைந்து போன “பழங்காலப் பெட்டிக்கடை” தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. இதில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரியப் பொருட்கள் மற்றும் மிட்டாய் வகைகள் பெற்றோர்களைத் தங்களது பால்ய காலத்திற்கு அழைத்துச் சென்றன. மேலும், தாயம், பல்லாங்குழி, பம்பரம், கண்ணாமூச்சி, கோலி, நொண்டி போன்ற மூளைக்கும் உடலுக்கும் வலுசேர்க்கும் விளையாட்டுகளும், விறுவிறுப்பான உறியடித்தல் மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளும் நடத்தப்பட்டன. பள்ளியில் திரண்டிருந்த பெற்றோர்கள், தங்கள் கரங்களால் பொங்கலிட்டுத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பை வெளிப்படுத்தினர்.
பள்ளியின் தாளாளர் கே.சிவசாமி மற்றும் செயலாளர் எஸ்.சிவகாமி ஆகியோர் பொங்கல் சிறப்புப் பூஜையில் பங்கேற்று, உழவுக்கு உயிரூட்டும் ‘கோமாதா’ எனப்படும் பசுவிற்குப் பொங்கல் மற்றும் பழங்களை ஊட்டி மகிழ்ந்தனர். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் விதமாக அமைந்த இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விழாவைச் செம்மையாக வழிநடத்திய தலைமை ஆசிரியை கமலாம்பாள், இயக்குநர் சக்திநந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளி முதல்வர் லாவண்யா ஆகியோர், மாணவர்களின் கலைத்திறனைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பன்பாட்டுச் சிதைவு அதிகரித்து வரும் இக்காலத்தில், பள்ளி மாணவர்களிடையே இதுபோன்ற விழாக்களை நடத்துவது ஒரு ஆரோக்கியமான சமுதாய மாற்றத்திற்கு வித்திடும் என சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
