கோவை கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மூன்று குற்றவாளிகளையும் காவல்துறை சுட்டுப்பிடித்துள்ளது.
கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இரவு, கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள பகுதியில், தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், மூன்று பேர் திடீரென காரை தாக்கி, கத்தியால் கண்ணாடியை உடைத்து, மாணவியின் நண்பரை காயப்படுத்தி, மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்த கொடூரம் தமிழகமெங்கும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில், 7 சிறப்பு படைகளை அமைத்து காவல்துறை தீவிரமாக தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டது.
துடியலூரில் பதுங்கிய குற்றவாளிகள் :
தேடுதல் நடவடிக்கையின் போது, குற்றவாளிகள் துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் குணசேகர் தலைமையிலான குழுவினர் குற்றவாளிகளை சுற்றிவளைத்தனர்.
அப்போது தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளிகள், தலைமை காவலர் சந்திரசேகரை கத்தியால் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரு குற்றவாளிகள் இரு கால்களிலும், மேலும் ஒருவர் ஒரு காலிலும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
பிடிபட்ட குற்றவாளிகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி மற்றும் கார்த்திக் என்கிற காளீஸ்வரன் என தெரியவந்துள்ளது. இவர்களுக்கு மீது முன்பே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரும் தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் காயமடைந்த காவலர் சந்திரசேகரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

















