மதுரை : நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை பாரபத்தியில் தவெக இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி கோரிக்கையைச் சமர்ப்பித்தபோது, காவல்துறை சார்பில் 42 கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றிற்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னர் மாநாட்டு அனுமதி தொடர்பாக திருமங்கலம் ஏஎஸ்பியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனந்த் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “21ஆம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி கிடைத்துள்ளது. எங்கள் கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன” என்றார்.
















