தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக (PRO) பணியாற்றிய அதிகாரி ஒருவர், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.74 லட்சம் வரை மோசடி செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்த அதிகாரி மற்றும் அவரது மனைவி மீது தேனி மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை ஆரப்பாளையம் மணிநகரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் கடந்த 2021-ம் ஆண்டு தேனி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்தார். அப்போது பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தைச் சேர்ந்த சாந்தி என்பவரின் மகன் சூரியநாராயணனுக்கு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (APRO) பணி வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
தனக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், ஏற்கெனவே பலருக்கு வேலை வாங்கித் தந்துள்ளதாகவும் சண்முகசுந்தரம் நம்ப வைத்துள்ளார். இதனை உண்மை என நம்பிய சாந்தி, கடந்த 2021 செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான குறுகிய காலக்கட்டத்தில் பல தவணைகளாக மொத்தம் 50 லட்சம் ரூபாயைச் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளியிடம் வழங்கியுள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள், வேலை வாங்கித் தராமலும் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சாந்தி மேற்கொண்ட விசாரணையில், தன்னைப்போலவே அல்லிநகரம் செல்லத்தம்பியிடம் ரூ.4 லட்சம், கண்டமனூர் பவித்ராவிடம் ரூ.4 லட்சம், பெரியகுளம் பழனிகுமாரிடம் ரூ.12 லட்சம் மற்றும் தென்கரை முத்துப்பாண்டியிடம் ரூ.4 லட்சம் எனப் பலரிடம் மொத்தம் 74 லட்சம் ரூபாய் வரை சண்முகசுந்தரம் தம்பதியினர் மோசடி செய்திருப்பது அம்பலமானது.
பாதிக்கப்பட்ட சாந்தி இது குறித்து தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) சினேகா பிரியாவிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்தார். புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்ட எஸ்.பி., உடனடியாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி, மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளர் மாயாராஜலட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் யாழிசை செல்வன் ஆகியோர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது சண்முகசுந்தரம் சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வரும் நிலையில், இந்த மோசடி விவகாரத்தில் இன்னும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். அரசுப் பணியில் இருக்கும் அதிகாரியே இத்தகைய பெரும் பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தேனி மற்றும் சேலம் மாவட்ட அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















