சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது நள்ளிரவில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, “போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களை அடித்து, ரிப்பன் மாளிகை வாசலில் இருந்து அகற்றியுள்ளனர். அவர்கள் என்ன சமூக விரோதிகளா, குண்டர்களா, நக்சலைட்டுகளா? திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், அறவழியில் போராடியது தவறா? எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, நிலுவையில் வழக்குகள் இருந்தாலும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறிய கடிதங்கள் நினைவிலிருக்கிறதா?” என்று முதல்வர் மு.க. ஸ்டாலினை கேள்வி எழுப்பினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகமும் தாக்குதலை கண்டித்து, “காவல் துறையினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி, நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் தூய்மைப் பணியாளர்களை ஏற்றி சுற்றிக்கொண்டிருப்பது நாகரிக சமூகம் வெட்கப்படும் செயல்” என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், தூய்மைப் பணியாளர்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு காண முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும் என்றும் சண்முகம் வலியுறுத்தினார்.