பா.ம.க.வில் அன்புமணிக்கு வழங்கப்பட்ட செயல் தலைவர் பதவி பறிக்கப்படுமா? அவரை கட்சியிலிருந்து நீக்குவதா? என்பது குறித்து கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தீர்மானிக்க உள்ளார்.
பா.ம.க.வில், ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனியே பொதுக்குழு கூட்டி தாங்களே தலைவர்கள் என அறிவித்துள்ளனர். ஆதரவாளர்களை நீக்கும் நடவடிக்கைகளும், புதிய நியமனங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், கடந்த 17-ம் தேதி புதுச்சேரியில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதில், ராமதாஸுக்கு எதிராக பேசியது, பனையூரில் தனி அலுவலகம் தொடங்கியது, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது, தைலாபுரம் இல்லத்தில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கும்.
அன்புமணிக்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தாலும், அவர் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
இதையடுத்து, இன்று தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூடுகிறது. அப்போது, அன்புமணியை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பான முடிவை ராமதாஸ் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
இதேவேளை, ராமதாஸ் தலைமையில் நேற்று பா.ம.க. சமூக ஊடகப்பேரவை கூட்டமும் நடைபெற்றது. இதில், அரசியல் விமர்சனங்களை நாகரிகமாக கையாள வேண்டும் எனவும், சட்டசபை தேர்தலை முன்னிட்டு வியூகங்களை சமூக வலைதளங்கள் வழியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். மேலும், புதுப்பிக்கப்பட்ட அரசியல் பயிலரங்கத்தில் இளைஞர்கள், இளம்பெண்களைப் பயிற்சி பெற்று கிராமங்களுக்கு அனுப்பி, தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில், அன்புமணியுடன் மோதல் நீடித்து வரும் சூழலில், ராமதாஸ் தனது மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியை நிர்வாகக் குழு உறுப்பினராக ஏற்கனவே நியமித்துள்ளார். எனவே, அன்புமணியை நீக்கியால், செயல் தலைவர் பதவியை ஸ்ரீ காந்திமதிக்கு வழங்கும் வாய்ப்பு உள்ளதாக பா.ம.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

















