தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை, சித்தையன்கோட்டை தேர்வுநிலைப் பேரூராட்சியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிவித்துச் செயல்படுத்தி வரும் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் குறித்து இந்தக் கண்காட்சியில் புகைப்படங்கள் மூலம் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
கண்காட்சியில் இடம்பெற்றிருந்த முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு: ஏழை எளியோர் வாழும் இடத்திலேயே மருத்துவச் சேவை. அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி நேரங்களில் சத்தான காலை உணவு வழங்குதல். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ₹1,000 நிதியுதவி.
அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம். அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக் கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 வழங்குதல். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் மாபெரும் தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம்கள். ஏழை எளியோருக்குச் சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும் திட்டம். உயர்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவி மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான பராமரிப்பு நிதியுதவி திட்டங்கள்.
மேலும், இந்தக் கண்காட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட இந்தச் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை, சித்தையன்கோட்டை தேர்வுநிலைப் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி ப. ஜெயமாலு, பேரூராட்சி தலைவர் திருமதி போதும்பொண்னு முரளி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் பார்வையிட்டு, திட்டங்கள் குறித்த விவரங்களை அறிந்துகொண்டனர்.
















