மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தேவனூர் கிராமத்தில், நண்டலாற்றின் கரையை ஒட்டிய பகுதியில், குளத்தில் வண்டல் மண் எடுப்பதாக வருவாய் துறை வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று விட்டு, ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் இரவு பகலாக டாரஸ் லாரிகளில் மணல் ஏற்றி அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக நண்டலாற்றின் கரை உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து மணல் குவாரி நடத்துபவர்களிடம் கிராமப் பெண்கள் உள்ளிட்டோர் கேட்கும்பொழுது, கொலை மிரட்டல் விடப்பட்டதாக பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்பொழுது கனமழை பெய்து வரும் நிலையில் ஆற்றின் கரை உடைந்தால் தங்களது கிராமம் பெரும் பாதிப்பை அடையும் என்றும், விலை நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.

















