சென்னை : கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோ, பிரச்சார கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச். தினேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கரூர் சம்பவத்தில் விஜய் நேரடியாக பொறுப்பு உடையவராக இருந்தும், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவர் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்குக் காரணம். எனவே இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் தவிர்க்க, ரோடு ஷோ மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் வகுக்க வேண்டும். விதிகளை மீறும் பட்சத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களுக்கும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
அதேபோல், இப்படிப் பட்ட நிகழ்ச்சிகளில் சிறுவர்களை அழைத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும். பாதுகாப்பு நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்தக் கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் அக்டோபர் 3 ஆம் தேதி நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.