மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் திருட்டை தடுத்து நிறுத்த கோரியும், சட்டவிரோதமாக சவுடு மண் குவாரி அமைத்து அதிக ஆழத்தில் மணல் எடுத்து விற்பனை செய்த பகுதிகளில் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நாம் மக்கள் இயக்க தலைவர் தலைமையில் ஒருவர் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்;-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா டி.மணல்மேடு ஊராட்சியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் சட்டவிரோத மண் குவாரிகளை தடுத்து நிறுத்தியும், குவாரி என்று பெயரில் அதிக ஆழத்தில் மணல் எடுத்த இடங்களில் ஆய்வு செய்து மணல் எடுத்தவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நாம் மக்கள் இயக்கத் தலைவர் வழக்கறிஞர் சங்கமித்ரனுடன் வந்து மனு அளித்துள்ளார். சுரேஷ்குமார் அளித்த மனுவில் தான் டி.மணல்மேடு கிராமத்தில் வில்லாகுளம் என்ற குளத்தை 2024 ஆம் ஆண்டு தூர்வாரி மணல் எடுத்து மராமத்து பணி செய்து குளத்தை அரசிடம் ஒப்படைத்தேன். வில்லாகுளத்தில் அதிக அளவில் மண் எடுத்ததாக கூறி தனக்கு 9 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் வரவாய்துறையினர் அபராதம் விதித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்த நிலையில் இதுவரை விசாரணை செய்யப்படவில்லை. இந்நிலையில் நான்கு வழி சாலை பணிக்காக சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் அரசு அனுமதியுடன் நடைபெற்று வரும் சவுடு மண்குவாரியில் ராட்சச இயந்திரங்களான ஹிட்டாச்சி போன்ற 11 இயந்திரங்கள் பயன்படுத்தி மண்ணெடுத்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவதாகவும், இந்த குவாரியில் 40 அடிக்கு மேல் ஆழம் தோண்டி சிலிக்கான் மணல் எடுத்து திருப்பூர் கோயம்புத்தூர் பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுபோல் மாவட்டத்தில் மேலபெரும்பள்ளம், கீழபெரும்பள்ளம், திருக்கடையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக உரிமம் பெறாமலும், உரிமம் பெற்ற இடத்தில் மணல் எடுக்காமல் அனுமதி பெறாத நிலத்தில் முறைகேடாக மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மணல் எடுக்கப்பட்ட இடங்களில் உரிய ஆய்வு செய்து அரசு அனுமதியுடன் தான் மண் எடுத்த குளத்தில் அதிக அளவில் மண் எடுத்ததாக அபராதம் விதித்தது போல் சட்டத்திற்கு புறம்பாக மணல் எடுத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

















