மயிலாடுதுறை புறநகர் பகுதியான சீனிவாசபுரம், பேச்சாவடி பகுதியில் ஒரு வார காலமாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மயிலாடுதுறை புறநகர் பகுதிகளான சீனிவாசபுரம், பேச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்கப்படாத நிலையில் அப்பகுதியில் வழங்கப்படும் உள்ளூர் குடிநீர் காவி நிறத்துடன் கலங்கலாக குடிப்பதற்கு தகுதியற்றதாக உள்ளது. இதனை பலமுறை சரி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் செய்து தரவில்லை. மேலும் தங்கள் பகுதிக்கு சாலை வசதி சரியில்லை என்றும் தெரிவித்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மயிலாடுதுறை திருவாரூர் முக்கிய சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தங்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
