திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் ஊராட்சியை இரண்டாகப் பிரிக்கும் அரசின் முடிவுக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட கடையடைப்புப் போராட்டம் எவ்வித சலனமுமின்றித் தோல்வியில் முடிந்தது. நிர்வாக வசதிக்காகவும், ஊராட்சியின் வளர்ச்சிக்காகவும் புத்தாநத்தம் மற்றும் இடையப்பட்டி என இரண்டாகப் பிரித்துத் தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அரசின் இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை ஒரு சில தரப்பினர் எதிர்த்துப் போராடி வந்த நிலையில், நேற்றைய கடையடைப்புப் போராட்டத்திற்கு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காதது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாகப் புதன்கிழமை அன்று முழு கடையடைப்பு நடத்தப்படும் எனப் போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், புத்தாநத்தம் மெயின் பஜார், திண்டுக்கல் ரோடு, இடையப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி விளக்கு, மெய்யம்பட்டி விளக்கு உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில் அனைத்துக் கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டிருந்தன. ஒரு சில குறிப்பிட்ட தெருக்களில் மட்டும் சுமார் 30-க்கும் குறைவான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வணிகர்கள் தங்களது பணிகளில் வழக்கம் போல் ஈடுபட்டதுடன், ஆட்டோக்கள் மற்றும் மினி சரக்கு வாகனங்கள் தடையின்றி இயக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன் தெற்கு தெருவில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் மிகக் குறைந்த அளவிலான மக்களே பங்கேற்ற நிலையில், தற்போது கடையடைப்புப் போராட்டமும் தோல்வி அடைந்திருப்பது போராட்டக்காரர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி இரண்டாகப் பிரிக்கப்படுவதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு கூடுதலாகக் கிடைக்கும் என்றும், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என்றும் இப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். சிறிய ஊராட்சிகளாக மாறும்போது நிர்வாகம் பொதுமக்களை எளிதில் சென்றடையும் என்பதால், அரசின் இந்த முடிவை வளர்ச்சி நோக்கில் பார்ப்பதாகப் பலதரப்பட்ட மக்களும், வணிகர்களும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
















