தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து போக்குவரத்து, அஞ்சல் துறை, ரயில்வே, காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதலமைச்சர் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், பழைய ஓய்வூதியத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பத்து விழுக்காடு கூடுதலாக வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி அனைத்து ஓய்வூதியர்களுக்கும் முழுமையாக சிகிச்சை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் குரு சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் முனியன், மாவட்ட பொருளாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

















