மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரபாஸ்கர்-மகாலட்சுமி தம்பதியினர். இவரது 15 வயது மகள் அரசு பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 3-ஆம் பள்ளிக்குச் சென்றவர் இரவு வரை வீடு திரும்பாததால், மறுநாள் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வக்காரமாரியை சேர்ந்த கணேசன் மகன் மகேஷ் என்பவர் சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி, கடத்திச் சென்றது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து, குத்தாலம் காவல் நிலையத்திலும், மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்திலும் தெரியப்படுத்தி ஒருவாரமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதோடு, சிறுமி குறித்து விபரம் எதுவும் அறியப்படவில்லை. இதனால், வேதனை அடைந்த பெற்றோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை விளக்க பதாகையுடன் இன்று தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஆட்சியரக அதிகாரிகள் சமரசம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர். மனுவைப் பெற்றுக்கோண்டு தகவல் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக காவல் துறையினருக்கு போன் செய்து பேசி, சிறுமியை மீட்க துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
















