சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் பங்குனி உற்சவ பெருவிழா

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் பங்குனி உற்சவ பெருவிழா கொடியேற்றம் வெகுவிமர்சியாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் பகவானும், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு இணையாக போற்றப்படும் செல்வமுத்துக் குமார சுவாமியும், சித்த மருத்துவத்தில் தலைவரான தன்வந்திரி சித்தரும் இங்கு தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இக்கோவிலுக்கு வந்து சுவாமி அம்பாளை தரிசிப் போருக்கு 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் பிரம்மோற்சவமான பங்குனி உத்திரப் பெறுவிழா இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது. சுவாமி அம்பாள் உற்சவர்கள் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். இரவு 09:30 மணி முதல் 11:30 மணிக்குள் தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடி மரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் கொடி மரத்தில் பூஜை செய்யப்பட்ட உற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்று நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நமச்சிவாய கோஷமிட்டு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியை தரிசனம் செய்தனர்.

Exit mobile version