வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு..
நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மறு உயிர் வழங்கிய அம்மனுக்கு நேர்த்திக்கடன்…”
திருவாரூர் மார்ச் 22-திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் பாடை கட்டி மாரியம்மன் என அழைக்கப்படும் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிராம வழிபாட்டு தலமாகவும் சக்தி தலமாகவும் போற்றப்படுகிறது.
சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த வாரம் கொடியேற்றதுடன் தொடங்கிய விழாவின் முக்கிய விழாவான பாடைகட்டி காவடி விழா இன்று நடைபெற்று வருகிறது.
நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நோய் குணமடைய வேண்டி மகா மாரியம்மனை வேண்டிக் கொள்வர்.. நோயிலிருந்து குணமடைந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பச்சை ஓலை படுக்கையுடன்.. பச்சை மூங்கிலால் பாடைகட்டி.. இறந்தவரை போல பாடையில் படுக்க வைத்து, இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்து.. பின்னர் அந்த பாடை காவடியை..
அருகில் உள்ள குடமுருட்டி ஆற்றுப் பகுதியிலிருந்து உறவினர்கள் 4 பேர் தூக்கிக் கொண்டு வந்து மகா மாரியம்மன் கோவிலை மும்முறை சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செய்வார்கள்.
அதன்படி, இன்று நடைபெறும் பாடைக்காவடி திருவிழா வில் பக்தர்கள் பாடைக்காவடிகள், பால்குடம், பால்காவடி, பறவைக்காவடி, செடில் காவடிகள் உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய வண்ணம் உள்ளனர்.
மேலும் இந்த விழாவிற்கு பல மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசித்து வருகின்றனர்.
எங்குமே இல்லாத ஒரு திருவிழாவாக பாடை கட்டி நேர்த்திக்கடன் செய்யும் விழா இங்கு மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்ட காவல் கண்கனிப்பாளர் கருண் கரட், தலைமையில் 500க்கும் மேற்பாட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
தீயணைப்புத் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதற்கான ஏற்பாடுகள் முழுவதும் இந்து அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
