மதுரை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் அவருக்கு மக்களின் அமோக ஆதரவு கிடைத்துவருகிறது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“அதிமுக-பாஜக கூட்டணியில் எந்தவிதமான விரிசலும் இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டில்லியில் சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் சந்தித்திருக்கலாம், அதில் எந்தத் தவறும் இல்லை.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மக்கள் சந்திப்புக்குச் செல்லும் இடமெல்லாம் அமோக ஆதரவு பெறுகிறார். அதிமுக-பாஜக உறவு நன்றாகவே உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு யார் ஐசியூக்கு செல்வார்கள் என்பதை உதயநிதிதான் நன்றாக அறிவார்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரிடம் நான் நற்பெயர் பெற்றுள்ளேன். அவர்கள் என்மீது தனிப்பட்ட முறையில் அன்பும், மதிப்பும், பாசமும் கொண்டுள்ளனர். சமீபத்தில் உள்துறை அமைச்சர் நெல்லைக்கு வந்தபோது என் இல்லத்திற்கே நேரடியாக வந்தார்.
எனவே எனக்கு பதவி விலக வேண்டிய சூழ்நிலை இல்லை; அதற்கான அவசியமும் இல்லை,” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.