சிவகங்கைமாவட்டம் சிங்கம்புணரி அருகே மாம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தும்பைபட்டியில் 20க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இப்பகுதிகளில் இயங்கி வரும் கல்குவாரியை நிரந்தரமாக மூட இரண்டாவது முறையாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் எங்கள் கிராமங்களை சுற்றி செயல்படும் கல்குவாரிகளால் கனிம வளங்கள் சுரண்டப்படுகிறது.
மேலும் அவற்றை வெட்டி எடுப்பதற்காக வைக்கப்படும் வெடிகளால் காற்று மாசுபடுவதோடு ஏற்படும் சத்தத்தினால் கிராமத்திற்குள் வசிக்கும் மக்களுக்கு இரவு பகலாக பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் வன விலங்குகள் மற்றும் மான்கள் அதிக அளவில் இருந்து வருகிறது. கல்குவாரியில் இடைவிடாது வைக்கப்படும் வெடி சத்தத்தினால் அச்சமடைந்த வனவிலங்குகள் தொடர்படியாக வாகனங்களில் அடிபட்டு இறந்து விடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் ஆறுக்கு மேற்பட்ட நபர்கள் இறந்துள்ளனர்.
அப்படி இருக்கையில் அதற்கு அருகாமையிலேயே மற்றொரு கல்குவாரிக்கு அரசுஅனுமதி அளித்துள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் உடனடிய தலையீடு செய்து எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கிராமபொதுமக்களின் கருத்து கேட்காமல் அனுமதி வழங்கிய கல்குவாரியை எந்தவித நிர்பந்தமுமின்றி நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவத்திற்கு வருகை தந்த சிங்கம்புணரி வட்டாட்சியர் நாகநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.அவரிடம் கிராம மக்கள் எங்களிடம் அனுமதி பெறாமல் இயங்கி வரும் கல்குவாரிக்கான அனுமதி உரிமத்தை ரத்து செய்ய உடனடி நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும் என கோரிக்கையாக கிராம மக்கள் முன் வைத்தனர்.
அதற்கு வட்டாட்சியர் தற்காலிகமாக குவாரி பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் நிரந்தரமாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் உங்களுடைய கோரிக்கையை முன் வைக்கிறேன் என உறுதி அளித்ததை எடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. காலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்திற்கு ஆதரவாக அதிமுக, பாஜக, தவெக,மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும் நிரந்தர தீர்வு கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து பல்வேறு ஆர்ப்பாட்டமும் போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் சார்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

















