கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இறச்சக்குளம் பகுதியைச் சேர்ந்த சார்ஸ் தனபாலன் அவர்களின் மகன் விஷால் (21), சட்டப்படிப்பு நான்காம் ஆண்டு பயின்று வந்த நிலையில், ஒரு விபத்தின் மூலம் தன் வாழ்வை முடித்துக்கொண்டு பலருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, சாலையில் குறுக்கே வந்த முதியவர் மீது மோதாமல் இருக்கப் பைக்கைத் திருப்பியுள்ளார். இந்தத் துணிச்சலான முயற்சியில் நிலைதடுமாறி கீழே விழுந்த விஷாலுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். முதலில் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காகப் பிப்ரவரி 27-ஆம் தேதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, பிப்ரவரி 28, 2026 அன்று அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
ஈடுசெய்ய முடியாத இந்தத் துயரத்திலும், தனது மகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய விஷாலின் பெற்றோர் முன்வந்தனர். அவர்களின் உயரிய சம்மதத்தைத் தொடர்ந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் இன்று அறுவை சிகிச்சை மூலம் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கருவிழிகள் மற்றும் தோல் ஆகியவை வெற்றிகரமாகத் தானமாகப் பெறப்பட்டன. இந்த உடல் உறுப்புகள் மூலம் சுமார் ஏழுக்கும் மேற்பட்டோர் புதிய வாழ்வைப் பெறவுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னதாக, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட் தலைமையில், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் சக மாணவ-மாணவியர் விஷாலின் உடலுக்கு மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். பிறர் உயிரைக் காக்கத் தன் உயிரைப் பணயம் வைத்ததுடன், மரணத்திற்குப் பின்னும் வாழ்ந்து காட்டிய அந்த இளம் சட்ட மாணவரின் தியாகம் குமரி மாவட்டத்தையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
















