மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வெளியூரை சேர்ந்தவர் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்திய நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சிறுபான்மையினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் ராகுல் காந்தியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் என்று எம்பி சுதா விளக்கம். வெற்றி பெற அனைவரும் பாடுபட வலியுறுத்தல்:-
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி நீண்ட இழுபறிக்குப்பின் நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கும்மிடிப்பூண்டியில் வசிக்கும் வழக்கறிஞர் சுதா அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் தொகுதிக்கு சம்பந்தமில்லாத ஒரு வேட்பாளரை காங்கிரஸ் தலைமை அறிவித்ததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் இன்று மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பு வழங்க பரிந்துரைக்காத எம்பி சுதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். எம்பிக்கு கருப்பு கொடி காண்பிப்போம் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒய் .எஸ் ஜமால் முகமது யூனூஸ் எம்பி சுதாவுடன் காமராஜர் மாளிகைக்கு வருகை தந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். கருப்புக் கொடி காண்பித்து போராட்டம் நடத்துவோம் என்று கூறியவர்களும் இதில் பங்கேற்றனர். தொடர்ந்து வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி சுதா கூறுகையில் சிறுபான்மையினர் ஒருவரை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்பதால் ராகுல்காந்தி எடுத்த முடிவின்படி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜமால் முகமது யூனூஸ் பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தார் என்றும் தெரிவித்தார்.
