தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பயணத்திற்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
செப்டம்பர் 15ஆம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க உள்ள நிலையில், இந்த நிகழ்வை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக, நவீன வசதிகளுடன் கூடிய பிரசார வேன் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரவனின் அனைத்து வசதிகளும் இணைக்கப்பட்டுள்ள இந்த வேனில், தொண்டர்கள் நேரடியாக அணுகாமல் இருக்க இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு காரணமாக நான்கு பக்கங்களிலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், மாவட்ட செயலர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, 25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஒன்றியத்திற்கு ஒரு செயலர் உள்ள நிலையில், புதிய அமைப்புச் சூழலில் இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
இதனுடன், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வரும் நிலையில், ஒன்றிய செயலர் நியமனமும் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது. மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் துவங்குவதற்கு முன்பாக, இந்த நியமனப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.