வலங்கைமானில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

வலங்கைமானில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

வலங்கைமான் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற வலங்கைமான் பாடை கட்டி மாரியம்மன் கோவில் அருகே, சிறு வெடி தயாரிக்கும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இந்த குடோனில் ஐந்து நபர்கள் வெடி மருந்து பிரித்து வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில் ராகுல் என்பவர் வெடி மருந்துகளை கையாளும் பொழுது அதிக அழுத்தத்தின் காரணமாகவும், கடும் வெயில் காரணமாகவும் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வலங்கைமான் அருகே தொழுவூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் மகன் ராகுல் (30) என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். மற்ற நால்வரும் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளார்கள். தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட தீயணைப்பு துறை தலைவர் ஹக்கீம் பாட்ஷா வலங்கைமான் தீயணைப்பு துறை நிலை அலுவலர் பார்த்திபன் மற்றும் எட்டு பேர் கொண்ட தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த ராகுலை தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த தீ விபத்தினால் கட்டிடம் முழுவதும் தரைமட்டமாக இடிந்து சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வலங்கைமான் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். நன்னிலம் டிஎஸ்பி மணிகண்டன், வலங்கைமான் வட்டாட்சியர் கார்த்திக், வருவாய் ஆய்வாளர் ரவீனா, விஏஓ பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

Exit mobile version