திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மடவாளம் மின்சார பகுதி நிலையத்தைச் சார்ந்த குறும்பகேரி புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமலாபுரம் கிராமத்தில், உயர் மின்னழுத்த (HT) மற்றும் குறைந்த மின்னழுத்த (LT) மின்சார கம்பிகள் ஒரே மின் கம்பத்தில் குறைந்த இடைவெளியில் பொருத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
சோமலாபுரம் கிராமத்தில் உள்ள SS–1 டிரான்ஸ்பார்மில் இருந்து வரும் உயர் மின்னழுத்த மின்சார வழித்தடம், அங்குள்ள தனியார் தொழிற்சாலைக்கு செல்கிறது. இந்த உயர் மின்னழுத்த மின்கம்பிகள், குறைந்த மின்னழுத்த மின்கம்பிகளுடன் ஒரே மின் கம்பத்தில், மிகக் குறைந்த இடைவெளியில் பொருத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், இந்த மின்கம்பங்கள் திருப்பத்தூரில் இருந்து ஜலகாம்பாறை செல்லும் மாநில நெடுஞ்சாலையின் ஓரங்களிலும், சோமலாபுரத்திலிருந்து ஜடையனூர் செல்லும் சாலையோரங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன
மேலும் இப்பகுதிகளில் குடியிருப்பு வீடுகள், கடைகள், நியாய விலை கடை, கோயில் மற்றும் பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவ்விடங்களுக்கான மின்சாரஇணைப்புகள் அனைத்தும், இதே குறைந்த மின்னழுத்த மின்கம்பிகளிலிருந்தே வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த மின்னழுத்த மின்கம்பிகளில் கோளாறு ஏற்பட்டால், அதை சரி செய்வதற்காக ஒவ்வொரு முறையும் உயர் மின்னழுத்த மின்சார வழித்தடத்தை துண்டிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிறது. ஆனால், சோமலாபுரம் கிராமத்தில் உயர் மின்னழுத்த மின்சாரத்தை தனியாக துண்டிக்கும் எந்தவித வசதியும் மின்சாரத் துறையால் ஏற்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த உயர் மின்னழுத்த மின்கம்பிகள் பொருத்தும் பணிகள் நடைபெற்ற போது, ஊர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதை மீறி சுமார் நான்கு மாதங்களாக மின்சாரத் துறை ஊழியர்கள் இந்த பணிகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, பொதுமக்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அபாய எச்சரிக்கை பலகைகள் கூட பொருத்தப்படாமல், மின்சாரம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பின்பு இதன் விளைவாக, 13.12.2025 அன்று சோமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜான் போஸ்கோ என்பவர், உயர் மின்னழுத்த மின்சாரம் குறித்து அறியாமல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம், கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சோமலாபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின்னழுத்த மின்சார கம்பிகளை உடனடியாக அகற்றி, வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி அமைத்து மின்சாரம் வழங்க வேண்டும் எனவும், உயிரிழந்த ஜான் போஸ்கோ குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் இன்று வராததால் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்த போது அவர்கள் நீங்கள் போய் ஏடியிடம் மனு வழங்கும் என அலட்சியமாக பதில் சொல்லியதால் சோமலாபுரம் பொதுமக்களும் இறந்து போன குடும்பத்தினரும் வேதனை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதுSomalapuram
















